அரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு!

Published:

nallakkannu house - 2026

நல்லகண்ணுவுக்கு அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு ஒதுக்கீடு செய்த புதிய வீட்டில் நேற்று அவர் குறியேறினார். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 95) பல ஆண்டுகளாக தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 1953-ம் ஆண்டு கட்டப்பட்டது. எனவே மிகவும் பழுதாகி இருந்த அந்தக் குடியிருப்பில் வசித்தவர்களுக்கு சீரமைப்புப் பணிகளுக்காக குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வெளியேறும்படி அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு அரசு வேறு வீடுகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த நிலையில், நல்லகண்ணு வீட்டை காலி செய்தார். அவரிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வேறு இடத்தில் வீடு ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார். அதன்படி, சென்னை நந்தனத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நல்லகண்ணுவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. அதில், நல்லகண்ணு தனது ஆயுள் காலம் முழுவதும் வாடகை இல்லாமல் குடியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சென்னை நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் லோட்டஸ் காலனி 3-வது தெருவில் நல்லகண்ணுவுக்கு தனி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தனது 2-வது மகள் டாக்டர் ஆண்டாள் குடும்பத்தினருடன், சென்னை கே.கே.நகரில் வசித்து வந்த நல்லக்கண்ணு நேற்று தமிழக அரசு ஒதுக்கீடு செய்த வீட்டில் குடியேறினார்.

இது குறித்து அவர் கூறிய போது, சென்னை நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஹால், 2 படுக்கை அறை, சமையல் அறை ஆகியவற்றை கொண்ட வீடு தமிழக அரசால் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் அரசு வீட்டில் இருந்து கொள்ளலாம் என்றும், வாடகை எதுவும் செலுத்த வேண்டியது இல்லை என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பொது வாழ்க்கை பல்வேறு கரடு முரடான பாதைகளை கொண்டது. இருந்தபோதிலும் நேர்மை தவறியது இல்லை. தமிழக அரசு வீடு ஒதுக்கி இருப்பது எனது பொது வாழ்க்கைக்கும், நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதுகிறேன். என்னிடம் 2 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. புத்தகங்கள் இல்லாமல் என்னால் ஒரு நாள் பொழுதை கூட கழிக்க முடியாது. இதனால், இந்த வீட்டுக்கு வந்த உடன் எல்லா புத்தகங்களையும் எடுத்து வந்தாச்சா? என்று என்னோடு வந்தவர்களிடம் கேட்டேன்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

புத்தகங்கள் படிக்கும்போது எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக புத்தகங்களை வைப்பதற்காக தனி அறை ஏற்படுத்தி வருகிறேன். எப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் புத்தக அறைக்கு சென்று படிக்க திட்டமிட்டுள்ளேன்.. என்றார்.

Related articles

Recent articles

spot_img