
சென்னை:
மாடுகளை காப்பதற்காக, உச்சநீதி மன்ற வழிகாட்டுதலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை எதிர்க்கும், இந்து விரோதமாக செயல்படும் அரசியல் கட்சிகளை, அமைப்புகளை இந்து முன்னணி கண்டிக்கிறது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மாடுகள் பெருமளவில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. நல்ல கறவை மாடுகள், கன்றுகள் முதலானவற்றை சந்தை மூலம் வாங்கி லாரி லாரியாக கேரளாவிற்குக் கொண்டு சென்று கொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பெருமளவில் கால்நடை செல்வங்கள் குறைந்துவிட்டன. நாடு முழுவதும் இது பெரிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தடுக்க உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிருகவதை தடுப்பு சட்டத் திருத்ததிற்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் முதலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும் இந்த சட்டம் முஸ்லீம்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது என பேசுவது உண்மைக்குப் புறம்பானது.
தமிழகத்தில் தொடர்ந்து இந்து விரோதமாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்புகள், தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், இடதுசாரி அமைப்புகள், முஸ்லீம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவற்றை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் 85% மாட்டிறைச்சி சாப்பிடாத இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள். அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் இவர்கள் கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இந்துக்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகளின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர இந்து முன்னணி மக்களை கேட்டுக்கொள்கிறது.
இயற்கை விவசாயம் பெருக வேண்டுமானால், கால்நடைகள் அவசியம் தேவை. நமது பேராசை இயற்கையை அழிப்பதில் தான் முடிகிறது. கால்நடைகளையும், மரங்களையும் அழித்ததால் இன்று மழை வளம் குறைந்து, மண் வளம் குறைந்து விவசாயம் பொய்த்து போய் வருகிறது. இரசாயன உரங்களால், பூச்சி கொல்லி மருந்துகளால் தீராத வியாதி ஏற்படுகிறது.
விவசாயம் செழிக்கவும், இயற்கை பாதுகாக்கப்படவும் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் வரவேற்றுள்ளது. பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும், பசுவதை செய்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது. கேரள உயர்நீதி மன்றத்தில் இடதுசாரிகள் தொடுத்த வழக்கில், மத்திய அரசின் திருத்தத்தை படித்து பார்த்தீர்களா? மதுரை உயர்நீதி மன்றம் புரிந்துகொண்டுதான் தடை விதித்ததா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கோ, மேலும், மாட்டு சந்தை மூலம் இறைச்சிக்கு மாடுகள் விற்கப்படுவதைத் தடுக்கிறதே தவிர, விவசாயிகள் மூலம் மாடுகள் வாங்குவதை இச்சட்டம் தடுக்கவில்லை. இறைச்சி கூடங்களுக்குத் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இளம் கன்றுகளை, பால் கொடுக்கும் பசுக்களை பாதுகாப்பதே இதன் நோக்கம்.
ஆடுகள் பெரும்பாலும் விவசாயிகள் மூலமே விற்கப்படுகிறது. அதுபோல மாடுகள் விவசாயிகள் மூலம் விற்றால் கால்நடை உற்பத்தி பெருகுவதுடன், விவாயிகளுக்கும் அதிக வருமானம் கிடைக்கவும் வழி ஏற்படுத்துகிறது இச்சட்டத்திருத்தம்.
ஜனவரி மாத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் மாடுகளை காப்போம் என்பதுதான் முக்கியமான கோரிக்கையாக எழுந்தது. இந்த கோரிக்கையை இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டிறைச்சி தடை என பேசி, கறிக்காக ஏங்கும் சீமான், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இடதுசாரி தலைவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் சீனாவின் சிறப்பு உணவான பாம்பு கறி, தவளை கறி, பன்றி கறி இலவசமாக இந்து முன்னணி அனுப்பி வைக்கும் போராட்டத்தை நடத்தும்.
இந்துக்கள் தெய்வமாக வழிபடும் பசுவை காப்பதற்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்ட திருத்தத்தை இந்து முன்னணி ஆதரிக்கிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோபூஜை செய்து இந்து முன்னணி இதனை கொண்டாடும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.



