
மதுரை:
தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியாக தி.மு.க. இல்லை. பா.ஜ.க. தான் என்று கூறினார் பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியது:–
மதுரையில் மோடி அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படம் கிழிக்கப்பட்டது. இது குறித்தும், பா.ஜ.க. பிரமுகர் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்தும் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியாக தி.மு.க. இல்லை. பா.ஜ.க. தான் இனி மாற்றுக் கட்சியாக செயல்படும். இன்னும் 3 மாதத்தில் இது தெரியவரும்.
தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சரியாக செயல்படவில்லை. சி.டி. ஆதாரத்தை வைத்து ஆட்சியை கலைக்கச் சொல்கிறார்கள் அது சரியில்லை. இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது. திராவிடக் கட்சிகள் ஒன்றை ஒன்று குறைகூறி வருகின்றன. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவரது விருப்பம். வந்தால் வரவேற்போம். அவர் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்யட்டும்.
புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி கிடைத்தது எப்படி? பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது… என்று கூறினார்.




