
சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் பெருமளவில் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கின. அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.900 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான கணக்குகளை குறிப்பிட்ட ஆதாரங்கள் சிக்கின. இதை அடுத்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்தத் தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டுப் பெற்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன், கடந்த ஏப்ரல் மாதமே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவரது மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.



