
கோல்கத்தா:
பேலூர் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைமை சுவாமிஜி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், ஞாயிற்றுக் கிழமை நேற்று ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் முக்தி அடைந்தார். அவர் முதுமையின் காரணத்தால் வரும் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 98. அவரது இறுதிச் சடங்குகள் திங்கள் கிழமை இன்று இரவு 9.30 மணிக்கு பேலூர் மடத்தில் நடைபெறுகிறது.
1919ம் வருடம் தாகா அருகில் உள்ள சபாஜ்புரில், புத்த பூர்ணிமா தினத்தில் பிறந்தவர் சுவாமிஜி. இவர் தமது மிகச் சிறிய வயதிலேயே ராமகிருஷ்ண மிஷனில் ஈடுபாடு கொண்டு இணைந்தார். 22ம் வயதில் 1941 ஜனவரி 3ம் நாள் ராமகிருஷ்ண மடத்தில் துடிப்புடன் சேர்ந்தார். தம்மை சேவைப் பணிகளில் முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார்.
1966ல் ஒரு முறை சுவாமி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ண ஆச்ரமத்துக்கு வந்திருந்தார். அப்போது, சுவாமி விவேகானந்தரின் மீது பெரும் பற்றும் மதிப்பும் கொண்டிருந்த இளவயது மோடி அவரைச் சந்தித்து, தாமும் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து, துறவி ஆக விரும்புவதாகத் தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் செலவழித்தார் மோடி. அப்போது, மடத்தை சுற்றிப் பார்க்கவும், மடத்தில் துறவிகள் குறித்து பார்த்து அறியவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மோடிக்கு! ஆனால், அவரது இயல்பைக் கண்ட சுவாமிஜி, உனக்கு துறவு விதிக்கப்படவில்லை; வேறு பணிகள் உனக்காகக் காத்திருக்கின்றன; நீ தனித்திருக்க வேண்டியவன் இல்லை, மக்களுடன் கலந்து இருக்க வேண்டியவன் என்று கூறி, அவர் மடத்தின் துறவி ஆவதை மறுத்து திசை திருப்பி விட்டார்.
சுவாமிஜி குறித்து நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, “சுவாமிஜியின் திடீர் இழப்பு எனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பு. அவருடன் நான் என் வாழ்நாளின் மிக முக்கியமான காலகட்டத்தில் கழித்திருக்கிறேன்” என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
Swami Atmasthananda ji was blessed with immense knowledge & wisdom. Generations will remember his exemplary personality.
— Narendra Modi (@narendramodi) June 18, 2017
The demise of Swami Atmasthananda ji is a personal loss for me. I lived with him during a very important period of my life. pic.twitter.com/eY3TKU41Xf
— Narendra Modi (@narendramodi) June 18, 2017



