சென்னை:
அதிமுக., பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே செவ்வாய்க்கிழமை (செப்.12) திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை அக். 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
மிகவும் பரபரப்பான சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை கூட்டப்படுகின்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்கை தினகரன் தரப்பில் அவரது ஆதரவு எம்எல்ஏ., வெற்றிவேல் தாக்கல் செய்தார். காலையில் விசாரித்த தனிநபர் கொண்ட நீதிபதி தடை விதிக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக, மனுதாரர் வெற்றிவேலுவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால், இந்த வழக்கை அவருடைய வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் முறையிட்டனர். மேல்முறையீட்டு மனுவாக தாக்கல் செய்யுமாறு அவர் அறிவுறுத்தியதால், இந்த மனுவை ராஜீவ் ஷக்தர் , அப்துல் குத்தூஸ் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. விசாரணையில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மனுதாரர் வெற்றிவேல் தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்தாக, தேர்தலுக்காக வழங்கப்பட்ட பெயர்களை வைத்து பொதுக்குழு கூட்டப்படுவது சரியல்ல. பொதுக்குழு தொடர்பான அழைப்பிதழில் யாருடைய கையெழுத்தும் இல்லை. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அதிமுக என்ற கட்சியே தற்போது இல்லை. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்ற கட்சிகள் இணைந்ததை தேர்தல் கமிஷன் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இணைப்பு என்பது தேர்தல் ஆணையத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட முடியும். அண்மையில் இரு தரப்பும் இணைந்தது என்பது ஏற்புடையதல்ல. கட்சியின் விதிப்படி பொதுச் செயலாளருக்கு பின் துணை பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உண்டு. பொதுக்குழு கூட்டப்படுவது குறித்து எவ்வித தகவலும் துணை பொதுச் செயலாளருக்கு தெரிவிக்கப்படவில்லை. கட்சி பெயர் மற்றும் சின்னம் ஆகியன தொடர்பாக எங்களுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டது.
இதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், 2,400 பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே எதிர்க்கிறார் . தினகரன் ஒரு பொதுக்குழு உறுப்பினர் கூட இல்லை என்றனர். மேலும், இரு அணியின் கூட்டுக் கூட்டத்திற்கே தலைமைக் கழகம் என்று அறிவித்துள்ளோம். வெற்றிவேல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நாளை அதிமுக., பொதுக்குழுக் கூட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை. வழக்கு விசாரணை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர். இதனால் செவ்வாய்க்கிழமை நடத்தப் படுவதாக திட்டமிடப்பட்டிருந்த அதிமுக., பொதுக்குழுவுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது.
இன்னும் தேர்தல் ஆணையத்தால் சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதே செல்லாததாக, சர்ச்சைக்குரியதாக உள்ள நிலையில், அவரால் நியமிக்கப்பட்ட டிடிவி.,தினகரன் மட்டும் எப்படி துணை பொதுச் செயலராக முடியும் என்பது இவர்களின் கேள்வி. பதிலுக்குப் பார்ப்போம்.



