தேர்தலுக்காக துணை ராணுவம், காவல்துறை இணைந்து கொடி அணிவகுப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
Chennai Army 1 - 2026

தேர்தலை முன்னிட்டு சென்னையில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் ஒருங்கிணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்வாக்குப் பதிவு ஏப்.6-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல்ஆணையம் முழு வீச்சில் செய்துள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் துணை ராணுவப் படையினரும் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலின்போது பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் துணைராணுவப் படையினர் சென்னையில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இதில் போலீஸாரும் கலந்து கொண்டனர். சைதாப்பேட்டையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் விக்ரமன் தலைமையில் 60 துணை ராணுவப்படையினர், 20 ஆயுதப்படை காவலர்கள், 7 உதவி காவல் ஆய்வாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பூக்கடை பகுதியில் நடந்த அணிவகுப்புக்கு பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையர் மகேஷ்வரன் தலைமை தாங்கினார். என்எஸ்சி போஸ் சாலையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு வால்டாக்ஸ் சாலை முதல் பாரிமுனை வரை நடந்தது. இதில், 12காவல் ஆய்வாளர்கள், 20 காவல்உதவி ஆய்வாளர்கள், 80 துணைராணுவப்படையினர், 40 ஆயுதப்படையினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குறளகம் மற்றும் கண்ணகி நகரிலும் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.