சென்னை: சேலம் அருகே கோவிலுக்கு பூட்டு போட்டது, மக்களின் வழிபாட்டு உரிமையை அரசே சதி செய்து பறிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வேடுகாத்தான்பட்டி கிராமத்தில் உள்ள சைலேஸ்வரர் கோவிலுக்கு அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் உழைப்பையும், பொருளையும் கொட்டி திருப்பணி செய்துள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து இன்று குடமுழுக்கு நடைபெறவிருந்த நிலையில் சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் கோவிலுக்கு பூட்டு போட்டு பூட்டிய மாவட்ட நிர்வாகம், 21 கிராமங்களில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது. வேடுகாத்தான்பட்டியிலுள்ள சைலேஸ்வரர் கோவில் தான் அங்குள்ள 21 கிராம மக்களின் பாரம்பரிய கோவிலாக திகழ்ந்து வருகிறது. இக்கோவிலை அவர்கள் தான் பல்லாண்டு காலமாக பராமரித்து வருகின்றனர். இக்கோவிலில் வேறு யாருக்கும் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அதனடிப்படையில் தான் அப்பகுதி மக்கள் தங்களது வருவாயில் ஒரு பகுதியை சேமித்து இந்த கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். இதையடுத்து குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த இன்னொரு சமுதாய மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட சிலர், அக்கோவிலில் குடமுழுக்கு செய்வதற்கான உரிமையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரையும் பெயரளவுக்கு அழைத்துப் பேச ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறி, இன்று நடைபெறவிருந்த சைலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை தடுத்து நிறுத்தி விட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், அங்குள்ள வேடுகாத்தான்பட்டி, பனங்காடு, கண்டம்பட்டி, தளவாய்ப்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி சித்தர் கோவில் மலையில் குடியேறி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக உழைத்து புதுப்பிக்கப்பட்ட கோவிலில் குடமுழுக்கு நடைபெறவிருந்த நிலையில், சம்பந்தமே இல்லாத சிலர் விடுத்த வேண்டுகோளை ஏற்று குடமுழுக்கு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட ஊர், குறிப்பிட்ட சமுதாயம் ஆகியவற்றுக்கு சொந்தமான கோவில்கள் ஏராளமாக உள்ளன. இக்கோவில்களை நிர்வகிப்பதற்கான உரிமை அவற்றை உருவாக்கி, பராமரித்து வரும் ஒரு பிரிவினரிடமே இருக்கும். இந்த உரிமையை நீதிமன்றங்களும் அங்கீகரித்திருக்கின்றன. அதன்படி, சைலேஸ்வரர் கோவில் மீது 21 கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை மாவட்ட ஆட்சியர் மதித்திருக்க வேண்டும். இக் கோவிலை நிர்வகிக்கும் உரிமை கோரி சிலர் மனு கொடுத்த போது, அக்கோவிலை நிர்வகிக்க அவர்கள் உரிமை கோர இயலாது என்பதையும், வேண்டுமானால் வழிபடும் உரிமையை கேட்டுப்பெறலாம் என்பதையும் எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஆனால், தன்னிச்சையாக செயல்பட்டு கோவிலை மூடவும், கோவிலை உருவாக்கிய மக்கள் வாழும் பகுதிகளில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது ஏற்றுக்கொள்ள முடியாத சர்வாதிகாரம் ஆகும். சேலம் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சிலர் தான் குடமுழுக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்குடன் இப்படி ஒரு மனுவை ஆட்சியரிடம் கொடுத்தனர். அவர்களின் உண்மை நோக்கத்தைப் புரிந்துகொண்டு, ஆட்சியர் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியரோ நேர்மையின் அடிப்படையில் செயல்படாமல் ச(£)தியின் அடிப்படையில் செயல்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். குடமுழுக்குக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, யாகசாலைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அனைத்துக்கும் தடை விதித்ததையும், கோவிலுக்கு பூட்டு போட்டதையும் மிகப்பெரிய தெய்வக் குற்றமாக மக்கள் கருதுகின்றனர். குறித்த காலத்தில் குடமுழுக்கு செய்யாததால் தங்களுக்கு என்ன துயரம் நேருமோ? என்று அஞ்சுகின்றனர். மக்களின் உணர்வுகளை இந்த அளவுக்கு காயப்படுத்திய மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை நியாயப்படுத்த முடியாததாகும். இதன்மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 26 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட வழிபாட்டு உரிமையை பறித்திருக்கிறார். பொதுமக்களில் ஒரு பிரிவினர் ஏற்பாடு செய்யும் அவர்களின் சமய மற்றும் தெய்வீக உணர்வு சம்பந்தப்பட்ட விழாக்களை, அதனுடன் சம்பந்தமே இல்லாத யாரோ சிலர் இதுபோல் தடுத்து நிறுத்த முடியுமானால் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் சித்தர் கோவில் மலையில் குடியேறியுள்ள மக்களை அரசு அதிகாரிகள் சந்தித்து பேசி, அவர்கள் விரும்பும் நாளில் அவர்களின் விருப்பப்படி குடமுழுக்கு நடத்த அனுமதிப்பதாக வாக்குறுதி தர வேண்டும். மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய மாவட்ட ஆட்சியர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் அருகே கோவிலுக்கு பூட்டு: மக்களின் வழிபாட்டு உரிமையை அரசே சதி செய்து பறிப்பதா என ராமதாஸ் கேள்வி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari