
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக கிடுகிடுவென உயர்வு. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றம்..
தமிழகத்தில் பருவ மழை துவங்கி கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜாபுரம், தம்பிபட்டி, ராமச்சந்திராபுரம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஓடைகளின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர் மழையின் காரணமாக 43 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்தை பொறுத்து கூடுதலாக நீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று 41 அடி முழு கொள்ளவு கொண்ட கோயிலாறு அணையின் நீர்மட்டமும் 32 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளையும் நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.