சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஜோசப்ன்கருணை இல்லத்தில் முதியவர்களைக் கொன்று அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக வந்துள்ள புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் கிராம மலையடிவாரப் பகுதியில் தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் செயின்ட் ஜோசப் கருணை இல்லமானது கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதனை கேரளாவைச் சேர்ந்த தாமஸ் என்பவர் நிர்வகித்து வருகிறார். தற்போது இந்தக் கருணை இல்லத்தில் ஆண்கள், பெண்கள் என 369 பேர் தங்கியுள்ளனர். அதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, வடமாநிலத்தை சேர்ந்த முதியவர்களும் உள்ளடக்கம்.
இக்கருணை இல்லத்திற்குச் சொந்தமான காய்கறி மூட்டைகள் ஏற்றப்பட்ட போலி அவசர ஊர்தி வாகனத்தில் ஒரு சடலத்துடன் இரு முதியவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட மூதாட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பிறகு இக்கருணை இல்லம் குறித்து தற்போது வெளிவந்திருக்கிற தகவல்கள் யாவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அக்கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வில்லமானது முறையான அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பலர் விருப்பத்திற்கு மாறாக அவ்வில்லத்தில் அடைக்கப்பட்டு வைத்திருப்பதும், அங்கு தங்கியுள்ளவர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படாததும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. சாலையோரம் படுத்துறங்கும் ஆதரவற்ற முதியவர்களையும், பிச்சைக்காரர்களையும் கட்டாயப்படுத்தி கருணை இல்லத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு பட்டினிப்போட்டு மன நிலை பாதிக்கும் நிலைக்குத் தள்ளிக் கருணை கொலை செய்வதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியினை அளிப்பதாக உள்ளது.
அங்கு இறக்கும் முதியவர்களின் சடலங்களை அடக்கம் செய்யாது சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடி விடுகிற வடிவில் அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையானது பெரும் ஐயங்களைத் தோற்றுவித்திருக்கிறது. அங்குள்ள முதியவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் எலும்புகளை இவ்வறையில் வைத்து எடுக்கப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றமதி செய்யப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இங்கு 1,500க்கும் மேற்பட்ட சடலங்கள் அவ்வறையில் வைக்கப்பட்டதும், அதுகுறித்தான முறையான ஆவணங்கள் எதுவுமில்லாததும் இச்சந்தேகத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்து உள்ளன.
எனவே, முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் இக்கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை மீட்க வேண்டும். அங்கு நடைபெற்ற மரணங்கள் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்தப்பட்ட வேண்டும். மற்ற நாடுகளில் அரசுகள் மூத்தோர் கவனிப்பு இல்லங்கள் நடத்துவதைப்போல தமிழக அரசே மூத்தோர்களை கவனிக்க இல்லங்களை நிறுவவேண்டும்.
– இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.



