ஆய்வாளர் எட்டி உதைத்து பலியான உஷாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் அரசு நிதி உதவி

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை திருச்சி

சென்னை:

திருச்சியில் காவல் ஆய்வாளரால் துரத்தப் பட்டு, எட்டி உதைக்கப் பட்டு உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் குற்றவியல் விசாரணை முடிந்து, ஆய்வாளர் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் 7.3.2018 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், நிற்காமல் சென்ற ராஜாவின் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ராஜா என்பவரின் மனைவி உஷா என்பவர்
பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷா குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின் பேரில், திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். துறை ரீதியாக பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணையின் முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்… என்று தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.