காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காவிரி விவகாரம் தொடர்பாக, தில்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக நேற்று காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, 192 டி.எம்.சி., நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், இந்த நீரை 177.25 டி.எம்.சி.,யாகக் குறைத்து பிப். 16ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை அறிவுறுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழகத்தின் தரப்பில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
தில்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் இது குறித்துக் கூறியபோது, காவிரி விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்த திட்டம் வகுக்க குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சுமூக தீர்வு காண சரியான வகையில் திட்டம் வகுக்கப்படும். நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளைத் துவக்கியுள்ளோம். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். தேவைப்பட்டால் அடுத்தக் கூட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப் பட்ட நான்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், கர்நாடகம் வழக்கம் போல் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் முரண்டு பிடித்து வருகிறது. கர்நாடகத்தில் தேர்தல் நெருங்குவதால், வழக்கம் போல் காவிரி அரசியலை தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது கர்நாடக அரசு. இது தொடர்பாக, கர்நாடக மாநில செயலர் ரத்தின பிரபா கூறுகையில் எங்களது முடிவை விரைவில் மத்திய அரசுக்கு தெரிவிப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை எனக் கூறினார்.