திருநெல்வேலி:
கனம ழை காரணமாக, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரியை ஒட்டிய கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெற்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
குமரியை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால், தென்தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, நாகர்கோவில், குளச்சல், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
முன்னதாகவே வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் எச்சரிக்கை விடுத்தால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். ஒரு சில விசைப்படகுகள் தவிர அனைத்து படகுகளும் கேரளா மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட தீவுகளில் கரைசேர்ந்து விட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழைபெய்துவருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அம்பாசமுத்திரம், கடையம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக, நீர் இன்றி காய்ந்து போய் இருந்த குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீர் கொட்டுகிறது. விடியவிடிய பெய்த மழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுமண்டலம் லட்சத்தீவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதால், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, மழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 11ஆம் வகுப்புத் தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும், அது நீங்கலாக மற்ற வகுப்புகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுத்தேர்வு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் வழக்கம் போல் தேர்வு மையங்களுக்கு செல்வார்கள் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.