
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் தனியார் பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, கண்களை கூசச் செய்யும் மின்விளக்குகளின் வெளிச்சம் காரணமாக கண்களில் இருந்து நீர் வடிந்து, கண்கள் சிவந்தன. இதை அடுத்து, தனியார் கண் மருத்துவமனை மூலம் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப் பட்டது.
அதிக அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதப் பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இதற்கு, இந்த ஆண்டு விழாவிற்காக பயன்படுத்தப் பட்ட சக்தி வாய்ந்த மின்விளக்குகளின் வெளிச்சம் தான் காரணம் என்று கூறப் பட்டது. விழா முடிந்த நிலையில், இன்று காலை தான் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் மற்றும் தண்ணீர் வந்துள்ளது. எனவே இது குறித்த புகாரின் பேரில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்த தகவல் பரவியதும், பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற பலரும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துதனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து சிகிச்சை அளித்த அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், மாணவர்களுக்கு லேசான பாதிப்புதான், அதிகளவில் பாதிப்பு இல்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினர்.
இதனிடையே, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, இது குறித்து விசாரிக்கப் படும் என்றும், எந்த வகையான விளக்குகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து அறிந்து, இனி வருங்காலத்தில் இது போன்ற விளக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு லேசானது தான், அவர்கள் உடனே சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப் படுவர் என்றும் கூறினார்.
இந்நிலையில் ஏர்வாடி பள்ளி மாணவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக் குறைவாக செயல்படுதல், மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மீதும் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.



