
தில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்று வரும் வருடாந்திர வேளாண் வளர்ச்சி திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, இந்திய வேளான் ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த நிகழ்வின் மூலமாக ஒரே நேரத்தில் புதிய இந்தியாவின் 2 முக்கிய பாகங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். ஒன்று விவசாயிகள், மற்றொரு பகுதி விஞ்ஞானிகள். விவசாயிகள் உணவுகளை வழங்குகிறார்கள். விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்.
இந்த பட்ஜெட்டில் நாங்கள் புதிய திட்டத்தை அறிவித்தோம். அது கோபார் – தன் யோஜனா. இது உயிரி-வேளாண் வளங்களை செயலாற்றத் தூண்டும். கிராமப் புறங்களில் அதிக அளவில் கையாளப்படும் உயிரி-கழிவுகளை சரியான வகையில் கையாள, இந்தத் திட்டம் உதவும். அதுவும் மிகப் பெரிய அளவில் கையாளும் திறனை கிராமங்களுக்குப் பெற்றுத் தரும் என்று பேசினார் பிரதமர் மோடி.
இந்த விழாவில், தமிழக அரசுக்கு ஒரு விருதும் வழங்கப் பட்டது. 2015 – 16ல் உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு க்ருஷி கர்மான் என்ற விருது வழங்கப்பட்டது. பிரதமரிடமிருந்து இந்த விருதை அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக் கொண்டார். நெல், சிறுதானியம் உள்ளிட்ட தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.



