
சென்னை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து புரளி கிளப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவர், சென்னை, திருச்சி விமான நிலையங்களை சிலர் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தகவல் கிடைத்தது என்று புகார் கூறியுள்ளார். இதைத் தொடரந்து, சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையில் நடைபெற்றது.
இதனிடையே, இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னரே இந்த வெடிகுண்டு மிரட்டல் யாரோ விஷமிகள் செய்த புரளி என்பது தெரியவந்தது.
இதன் பின்னர், மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அந்த நபர் திருச்சி பூவலூரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 10 நாட்களில் 3 முறை சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது!



