
தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பெண்கள் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
குரங்கணி வனப் பகுதியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இவர்களில் 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்றுவரை உயிரிழந்த நிலையில் மதுரை கென்னட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி என்ற பெண் இன்று காலை 8.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்த சிறிது நேரத்தில் மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த நிவ்யா நிக்ருதி என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த சாய் வசுமதி, நிவ்யா நிக்ருதி இருவரும் சென்னையில் மென்பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.



