
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த கமல் நிகழ்ச்சி ரத்து
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த கமல்ஹாசன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய தோல் ஆராய்ச்சித்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகம் அனுமதியளிக்க மறுத்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைப் பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் 3 நாள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர். 2 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நிறைவுபெற்றன.
இன்று மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளை நடத்த திடீரென பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி என்பதாலேயே அனுமதி மறுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் சார்பில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார்.



