
சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் எங்கும் கிளைகள் பல கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் பலர் உண்டு. இந்தக் கடைகளில் பெரும்பாலான பொருள்களையும் ஒரே இடத்தில் விலை குறைவாக வாங்கிவிடலாம் என்பதால், எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் பிரபலமானது மட்டுமல்ல, இங்கே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்று எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் இடமும் கூட!
இந்நிலையில், இந்தக் கடைக்கு இன்று மாலை மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர். பின் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் ஒவ்வொரு தளத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.



