
சென்னை: மக்களின் கஷ்டத்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்கள்தான் சிஸ்டம் பற்றி பேசுகின்றனர். சிலரோ கருத்து கந்தசாமி ஆகிவிட்டனர் … இப்படி ஒரே நேரத்தில் நடிகர்கள் ரஜினிக்கும் கமலுக்கும் கிண்டல் தொனியில் பதில் கொடுத்திருக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
தமிழக அரசு ஓராண்டைக் கடந்து நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஓராண்டு சாதனையைக் கொண்டாட, ஆட்சியாளர்களுக்கு விருப்பமோ என்னவோ! சென்னை கலைவாணர் அரங்கத்தில் பெரிய அளவில் விழா ஒன்றை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்கள். சாதாரண விவசாயி ஆக இருந்து உழைத்து களைத்து சாதித்து அரசியலில் படிப்படியாக வந்து இப்போது முதல்வர் பதவியில் அமரும் அளவுக்கு சாதனை படைத்த முதல்வர் எடப்பாடி பேச்சு ஒரு விதம் என்றால், இந்த சாதனை விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது இன்னொரு சாதனைதான்!
கடந்த ஆகஸ்ட் மாதம்தான், ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்து இத்தகைய ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், எடப்பாடி தலைமையிலான அரசு அமைந்து ஓர் ஆண்டைக் கடந்துவிட்டதன் சாதனையாக இந்த விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. பகுதி நேர ஆளுநராக தமிழகத்தில் வந்து போய்க் கொண்டிருந்த வித்யாசாகர் ராவ், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி இருவரின் கையைப் பிடித்துக் கோத்து வைத்து குலுக்கு குலுக்கு என்று குலுக்கி எடுத்த காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாதுதான்!
எனவே, இந்த ஆட்சி இத்தனை எதிர்ப்புகளையும் கடந்து நடந்து கொண்டிருப்பதே ஒரு சாதனைதான் என்று ஒரு புறம் கருத்துகள் நிலவ, அதனைத் தம் வார்த்தைகளிலும் காட்டிவிட்டார் ஓபிஎஸ்.
அவர் பேசிய போது, நம்மை எதிர்ப்போருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி; அதுவும், மூன்று அதிர்ச்சிகள். ஜெயலலிதாவின் கடும் உழைப்பால், உருவான நல்லாட்சியை அவரது மறைவுக்கு பின் கட்டிக்காத்து, ஓராண்டை கடந்து விட்டனரே என்பது முதல் அதிர்ச்சி. அம்மாவின் திட்டங்களை நிறைவேற்றி, சாதனைகள் படைத்து வருவது இரண்டாவது அதிர்ச்சி. எதிர்ப்புகளை முறியடித்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து விடுவோம் என்பது மூன்றாவது அதிர்ச்சி.
அதிமுக.,வை கபளீகரம் செய்ய சில கழுகுகள் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வேட்டையாட விசுவாசமிக்க தொண்டர்கள், வேடன்களாக வீறுகொண்டு நிற்கிறோம். அம்மாவை உயிராக நினைக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை, நம் இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது.
இப்போதெல்லாம் புதிது புதிதாக சிலர் வந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் கஷ்டத்தை பற்றி கொஞ்சமும் கவலைப் படாதவர்கள், சிஸ்டத்தை பற்றி பேசுகின்றனர். சிலர், ‘கருத்து கந்தசாமி’ ஆகி விட்டனர். அவர்களைப் பற்றி நமக்கு கவலை இல்லை.
அரசியலை பற்றி தெரியாமல், எல்லாம் தெரிந்தது போல உளறுகின்றனர். அவர்களுக்கு மக்கள் போடப் போவது பூஜ்யம் தான். அம்மா மறைவுக்கு பின், இந்த ஆட்சி நீடிக்காது என பேசியவர்களும் அறிக்கை விட்டவர்களும் ஆடி அடங்கிப் போய் விட்டனர். அவர்கள் கூறிய அனைத்தையும் பொய்யாக்கி, அம்மா ஆட்சியை மட்டும் உண்மையாக்கி வெற்றி பெற்றுள்ளோம். பூனைகள் சேர்ந்து, யானையை அசைத்து விடலாம் என நினைக்கின்றனர்; அது ஒரு போதும் நடக்காது.. என்று பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்னர்தான் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று ஸ்டாலின் ஏதோ பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்த நிலையில், ஓபிஎஸ்ஸும் யானை பூனை என்று பேசவே, அனைவரும் அதனை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டனர்.



