
சென்னை எழும்பூரில் மதிமுக., தலைமை அலுவலகம் அருகே அக்கட்சித் தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் என நினைத்து சிலரை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
மதிமுக.,வின் மாநில மாணவர் அணிக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அப்போது மூலக்கொத்தளத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோவை கண்டித்து ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தாயகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.
ஆல்பர்ட் திரை அரங்கம் அருகே வந்த போது அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மதிமுக., மாணவர் அணிக் கூட்டம் நடைபெற்ற போது கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சிலர் ஆட்டோவில் சென்றனர். அப்போது அவர்களை மறித்த தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளீர்களா? எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த ஆட்டோவின் கண்ணாடி நொறுக்கப்பட்டது. அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதன் பின்னர், அந்தப் பகுதிக்கு வந்த போலீஸார், காயம்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்கப்பட்டவர்களும் மதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என்று விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ, மூலக்கொத்தளம் மயானத்தை அரசு எந்த விதத்திலும் தகர்க்க விடமாட்டோம் என்று கூறினார்.



