
சென்னை: மாவட்டங்கள் தோறும் ஆளுநர் நடத்தும் ஆய்வு குறித்தும், சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப் பட்ட துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்தும், ஆளுநரின் அழைப்பின் பேரில் சென்று சந்தித்த தம்மிடம், ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அவர் திடீரென மாவட்டம் தோறும், மத்திய அரசு திட்டங்கள் எப்படி செயல்படுத்தப் படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து வந்தார். இதற்கு திமுக., உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என குரல் எழுப்பப் பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, ஆளுநர் ஸ்டாலினை அழைத்து விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆளுநர் பன்வாரிலால் அழைப்பு விடுத்ததன் பேரில் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அவரை சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்ததன் பேரிலேயே, அவரை சந்தித்தேன். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக, சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டிருப்பது குறித்த திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் விளக்கமளித்தார்.
அடுத்து, தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொள்வது மாநிலத்தின் சுயாட்சியை பறிக்கும் செயல் என்றும், அது தவறானது என்றும் சுட்டிக்காட்டினேன். அதற்கு ஆளுநர், இனிவரும் காலங்களில், மாவட்டங்கள் தோறும் நடத்தும் ஆய்வு குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறினார்.

முன்னதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அவரது அழைப்பின் பேரில் மாலை 6 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.



