
சென்னை: போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிக்கை தாக்கல் செய்தார்.
2.57 காரணி ஊதிய உயர்வு கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், 2.44 காரணி ஊதிய உயர்வே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த தொமுச உள்ளிட்டதொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினன்.
ஆனால் இந்த வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. மேலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு தரப்பிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை கண்காணித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமித்தது. இதையடுத்து, நீதியரசர் பத்மநாபன் முன்னிலையில், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்நிலையில், பத்மநாபன் தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் அளித்தார்.
அந்த அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்மநாபன் அறிக்கை நகலை மனுதாரர், தொழிற்சங்கங்கள், அரசுத் தரப்பு அனைவரும் பதிவுத்துறை மூலம் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.



