
சென்னை: வரும் ஏப்.11ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி. அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடவெந்தையில் வரும் ஏப்.11 முதல் 14 வரை மத்திய பாதுகாப்புத் துறையின் சார்பில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
அப்போது தமிழகம் வரும் பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து, அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் நடந்தது. புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலர், தமிழக டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சேர்த்து வைக்கலாம் என்றும் தமிழக அரசின் சார்பில் பிரதமர் மோடியிடம் அனுமதி கோரப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



