
மதுரை: ‘கர்நாடகத்தில் பாஜக., ஆட்சி அமைந்தால்தான் காவிரியில் தமிழகத்துக்கு நீர் கிடைக்கும்’ என மதுரையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசினார். அவரது பேச்சை ஊடகங்கள் இப்போது சர்ச்சை ஆக்கியுள்ளன.
ஹிந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், மதுரை பழங்காநத்தத்தில் ‘வேல் சங்கமம்’ பொதுக்கூட்டம் நேற்று இரவு நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலர் ஹெச்.ராஜா. முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக் கெடு நிறைவடைந்து விட்டதே! ஏன் இன்னும் மத்திய அரசு இதில் எதுவுமே செய்யாமல் உள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, ‘‘காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொல், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற நதிநீர் பங்கீட்டு செயல் திட்டத்தை, மத்திய அரசு உறுதியாக செயல்படுத்தும். கர்நாடகத்தில் தேர்தல் நடப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப் போடுவதாகச் சொல்வதை ஏற்க இயலாது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைத்ததா? இல்லையே! எனவே, அங்கு பாஜக., ஆட்சி அமைந்தால்தான் காவிரி நீர் தமிழகத்துக்குக் கிடைக்கும்.’’ என்றார்.
ஏற்கெனவே, ஆளும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியைத் தக்க வைக்கவும், பாஜக. வெற்றி பெற்று விடாமல் பார்த்துக் கொள்ளவும் ஒரு ‘செக்’ வைக்கும் விதமாக காவிரி மேலாண்மை வாரியத்தை பிரச்னையாக்கி, கையில் எடுத்துள்ளது. அது, காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் பேச்சில் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. அவர் மத்திய அரசுக்கு சவால் விடுகிறார். எங்கே முடிந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து விடுங்கள் பார்ப்போம் என்று! மேலும், காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒன்று உச்ச நீதிமன்றத்தால் குறிப்பிடப் படவே இல்லை, அதையும் மீறி, தமிழகத்தின் நெருக்குதலுக்கு அடிபணிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படுமானால், அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்று எல்லாக் கூட்டங்களில் உரத்த குரலில் சொல்லி வருகிறார்.
இத்தகைய பின்னணியில், தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிட்டோம் என்று சொன்னாலே அது அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டு, வாங்கு வங்கியைக் குலைத்து விடும் என்ற அளவில் இருக்கும் போது, பாஜக., ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்று ஹெச்.ராஜா போன்றவர்கள் இங்கு பேசுவது, அதையே ஒரு தேர்தல் பிரசார உத்தியாக காங்கிரஸால் கையாளப்பட்டு, கிடைக்கும் ஓட்டுகளையும் பதம் பார்த்துவிடும் என்று பாஜக.,வினரையே புலம்ப வைத்துள்ளது.



