
மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி ஒருவர் திடீரென தீக்குளித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் இருந்து கம்பத்தை நோக்கி நடைப் பயணம் செல்ல திட்டமிட்டு இன்று மதிமுக., சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நடைப் பயணத்தை மதுரையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த நடைப் பயண துவக்க நிகழ்ச்சியின் போது, விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி திடீரென பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடனே அருகில் இருந்தோர் ரவியை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீக்குளித்த ரவி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தமது கட்சி நிர்வாகி தீக்குளித்த தகவல் அறிந்து வைகோ அழுதார். பின்னர், வைகோ நியூட்ரினோவுக்கு எதிராக நடைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
தொடர்ந்து பொன்மேனி என்ற இடத்தின் அருகே நடைப்பயணத்தில் வந்தவர்கள் சென்ற போது, வைகோவின் நடைப் பயணத்தால் என்ன பயன் விளையும் என அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மதிமுக தொண்டர்கள் அவரை அடித்து விரட்டினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் வைகோவை கட்டித் தழுவி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இருவரும் சற்று நேரம் அளவளாவினர். தொடர்ந்து, மூவேந்தர் கொடி ஒன்று இந்த நிகழ்ச்சியில் அசைக்கப் பட்டு, நடைப்பயணம் தொடங்கப்பட்டது.
இதுதான் தமிழகத்தின் மூவேந்தர்களின் முதற்கொடி, தமிழ்க் கொடி என்று சிலர் சிலாகித்துப் பாராட்டினர். இன்று மதுரையில் வைகோ அறிமுகப்படுத்தி இருப்பதுதான் தமிழ் மரபுக் கொடி. என்றார் பெ. மணியரசன்.



