
அழுத்தம் கொடுக்க வேண்டும், அழுத்தம் கொடுக்க வேண்டும்! – இதுதான் திமுக., பேசிவரும் அரசியல்! அதாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறார்.
மேலும், அதிமுக.,வினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால், திமுக., உறுப்பினர்களும் ராஜினாமா செய்வர் என்கிறார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அரசியல் செய்வதிலேயே கவனமாக இருக்கும் திமுக., ஏன் கர்நாடக மாநில அரசு பக்கம் தனது கவனத்தைத் திருப்பவில்லை?
காரணம், மாநிலத்தில் தற்போது நடைபெறவிருக்கும் தேர்தல்! எப்போதுமே, கர்நாடகம்தான், நடுவர் மன்றம் கூறியபடி காவிரியில் தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும். அதனால் பிரச்னை எப்போதும், கர்நாடக அரசை கண்டித்து போராட்டங்களாக, ஆர்ப்பாட்டங்களாக, கடை அடைப்பாக தமிழகத்தில் நடந்து வரும்.
ஆனால் இந்த முறை கர்நாடகத்தைப் புறக்கணித்துவிட்டு, மத்திய அரசின் மீது தமிழகத்தின் ஒட்டு மொத்தப் பார்வையும் பதிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், மத்திய அரசு! குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் என்பதில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட 6 வார கால அவகாசத்தை அடுத்தடுத்த கூட்டங்களால் தள்ளிப் போட்டு, தீர்வை எட்ட இயலாத நிலையில், மத்திய அரசுதான் முதற்காரணமாக வெளித் தெரிவதுதான் பிரச்னையின் ஆணிவேர்!

இந்த விவகாரத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மிகத் தெளிவாக அரசியல் ஆட்டத்தை ஆடி, சதுரங்கக் காயை வெகு லாகவமாக நகர்த்தியிருக்கிறார். காவிரி விவகாரம் குறித்து தீர்ப்பு வந்த உடனேயே, தனது பிரிவினை அரசியல் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கர்நாடகத்தில் களை கட்டியபோது, நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த தண்ணீர் அளவையே குறைத்து உச்ச நீதிமன்றம் சொன்னபோது, இதாவது ஒழுங்காகக் கிடைக்குமா என்ற சமரசப் போக்கில் தியாகத்தைச் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது தமிழகம்! ஆனால், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வந்த நாளில், தமிழகத்தில் அனைவரும் ஊடகங்களில் தெரிவித்த கருத்து, தமிழகம் வஞ்சிக்கப் பட்டுவிட்டது. நீரின் அளவைக் குறைத்தது தமிழகத்துக்குச் செய்யும் வஞ்சனை. அதே நேரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது சாதகமான அம்சம் என்று கூறினர்.
காரணம், எந்தக் காலத்திலும், கர்நாடகம் நடுவர் மன்றம் நிர்ணயித்த முழு அளவு தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்து விட்டதில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கணக்கீடுகளில் குளறுபடிகள், அதிக மழை பெய்து வெள்ளம் பெருகி, கிருஷ்ணராஜ சாகர் அணை நிறையும் போது திற்ந்துவிடப் படும் உபரி நீர், அங்கே இங்கே சேரும் தண்ணீர் என கணக்குக் காட்டுவதில் கர்நாடகம் நேர்மையைப் பின்பற்றியதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் உண்டு!
இத்தகைய பின்னணியில், காவிரி மேலாண்மை வாரியம் என்பதன் பொருளை இருவேறு திசைகளில் கொண்டு சென்றிருக்கின்றன, சம்பந்தப் பட்ட நான்கு மாநிலங்கள்! உச்ச நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வந்த பின்னர், மத்திய அரசு, மாநிலங்களின் பிரதிநிதிகளை அழைத்து கூட்டங்களை நடத்தியுள்ளது. மாநிலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு நீர்வளத்துறையின் மூலம் அவகாசம் கொடுத்துள்ளது. அப்படி நடைபெற்ற இரு கூட்டங்களில் தான், நான்கு மாநிலங்களும் தங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்தன.
துவக்கம் முதலே கர்நாடகம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. அதற்கு கேரளம் ஆதரவளிக்க, இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டது தமிழகம். உச்ச நீதிமன்றமும் நீர் அளவீடு முதற்கொண்டு எல்லாவற்றையும் தெளிவாக வரையறை செய்த போது, காவிரி மேலாண்மை வாரியம் என்பதை அழுத்திச் சொல்லாமல், ஸ்கீம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதுதான் பிரச்னையின் மூல காரணமானது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர், மத்திய அரசு இந்த விஷயத்தை வெறுமனே கிடப்பில் போட்டுவிட்டு அமர்ந்திருக்கவில்லை. அதன் பின்னும் நான்கு மாநிலங்களும் கலந்து கொள்ளும் வகையில் தில்லியில் கூட்டங்கள் நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் தான், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து அலசப் பட்ட போது, காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒன்று அமைக்க வேண்டும் என்றே நீதிமன்றம் உத்தரவிடவில்லையே என்ற குண்டைத் தூக்கிப் போட்டது கர்நாடகா. அதில் குறிப்பிடப் பட்டிருப்பது ஒரு ‘ஸ்கீம்’தான். ஸ்கீம் என்ற திட்டமானது, மேலாண்மை வாரியத்தைக் குறிப்பதல்ல என்று பிடிவாதம் பிடித்தது. அப்போதுதான், அதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த தமிழகம், லேசாக பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டது.
இந்த நிலையில், ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தைத் தான் குறிக்கிறது என்று தமிழகம் உறுதியாகச் சொல்ல, கர்நாடகம் இல்லை என்று சொல்ல, இப்போது கர்நாடகத்துக்கு ஆதரவாக நின்றது கேரளம். ஆனால், புதுச்சேரியோ, தமிழகத்தின் சொல்படி, ஸ்கீம் என்பது வாரியம்தான் என்றது. இதில்தான் அரசியல் சதி அடங்கியிருக்கிறது.
கர்நாடக காங்கிரஸுக்கு ஆதரவாக கேரள கம்யூனிஸ்ட்கள் துணை நிற்க, புதுச்சேரி காங்கிரஸ் வேறு திசையில் நின்றது. இந்தக் குழப்பங்களை வைத்து, கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்து விடும் முனைப்பில் நின்றது கர்நாடக காங்கிரஸ். அதற்கு ஏற்ப, தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக., சட்டமன்றத்திலும் வெளியிலும் காவிரியின் பெயரில், காங்கிரஸ் சொல்லிக் கொடுத்தபடி, மத்திய மாநில அரசுகளை ‘கார்னர்’ செய்யும் வேலைகளைச் செய்யத் தொடங்கியது.
இந்த நிலையில் தான் கடந்த வாரம், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதாவது, உச்ச நீதிமன்றம் சொன்ன ஸ்கீம் என்பதன் பொருள் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று! இந்த நேரத்தில் தமிழகமும் சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்கீம் என்பதன் பொருள் என்ன என்று கேட்டு, இரு வாரங்களுக்கு முன்னமேயே ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால், இப்போது சந்திக்கும் நெருக்கடியை சந்தித்திருக்க வேண்டியிராது. ஏன், இதனை மத்திய அரசே செய்திருக்கலாமே என்று கேட்கத் தோன்றும்.! மத்திய அரசும் முன்னமேயே விழித்துக் கொண்டு, ஸ்கீம் என்பதன் பொருள் குறித்து விளக்க உச்ச நீதிமன்றத்தைக் கோரியிருக்கலாம்தான். ஆனால் அதற்குள் முந்திக் கொண்டார் கர்நாடக முதல்வர் சித்தராமையா!
காரணம், கர்நாடகத் தேர்தல் வருவதால், தற்போதைக்கு இருக்கும் மாநில ஆட்சியை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை. அதே நேரம், இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிகளை அகற்றுவோம் என்று பேசிக் கொண்டு ஒவ்வொரு மாநிலமாக தங்கள் செல்வாக்கை விரிவாக்கிக் கொண்டு வரும் பாஜக., கர்நாடகத்தைப் பிடித்து விடத் துடிக்கிறது. இந்த அரசியலில் காவிரி மாட்டிக் கொண்டு விட்டது. குறிப்பாக தமிழகம்!
கர்நாடகாவில், காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்துக்கு விட மாட்டோம் என்று சட்டமன்றத்திலேயே முழங்கினால்தான் அக்கட்சிக்கு ஓட்டு விழும் என்ற குறுகிய அரசியலை வளர்த்து வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள். அதனால்தான், காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒன்று அமைந்தால், அதற்கு முழுப் பொறுப்பும் மத்திய பாஜக., அரசியே சேரும்! என்று முழங்கினார் கர்நாடக சித்தராமையா! அதாவது, கர்நாடகத்தின் எதிர்ப்பை மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் அது தமிழகத்துக்கு சாதகமாகவும், கர்நாடகத்துக்கு செய்யும் துரோகமாகவும் ஆகும் என்று வாக்கு வங்கி அரசியலை இழுத்து, பாஜக.,வை ‘கார்னர்’ செய்தார் சித்தராமையா!

அவருக்குத் துணையாக இங்கே திமுக., தாம் கூட்டணியில் இருக்கும் கூட்டணி தர்மத்துக்காக மத்திய பாஜக., அரசையே சாடி ஓரங்கட்டியது. உண்மையில், காவிரி மேலாண்மை வாரியத்துக்காக முனைப்புடன் செயல்பட்ட மத்திய அரசு, இப்போது சித்தராமையாவின் அரசியலால் இரண்டுங்கெட்டான் நிலைக்குப் போய் விட்டது. செய்வோம், ஆனால் சற்று தள்ளிப் போட்டு செய்வோம் என்ற நிலைக்கு பாஜக., வந்ததற்குக் காரணம், தேர்தல் அரசியல்!
இதனால்தான், மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலர், வாரியம் அமைத்தல் சாத்தியமற்றது என்று சொன்னதாக, முதல் நாள் ஒரு தகவல் வெளிவர, மறுநாள் … அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, அவ்வாறு சொல்லவில்லை, குறித்த காலத்துக்குள் சாத்தியமா என்றுதான் சொன்னேன் என விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று!
எனவேதான், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்க்கிறோம் – அமைக்க விட மாட்டோம்”- என்று பகிரங்கமாகச் சொன்ன காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து, தமிழகத்தில் ஏன் ஒரு கோஷம், ஒரு போராட்டம், ஒரு உருவபொம்மை எரிப்பு என எதுவும் நடக்கவில்லை என்பதன் பின்னணி, தெரியவருகிறது.
உண்மையில் காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்துவதாக இருந்தால், திமுக., உள்ளிட்ட கட்சிகளும் சரி, ஆளும் அதிமுக.,வும் சரி, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அதே வேளையில், சித்தராமையாவை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். கூடவே, கர்நாடகத்துக்கு ஆதரவாக நிலை எடுத்த கேரள கம்யூனிஸ அரசின் செயலை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்!
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம், கர்நாடகத்தை கண்டிக்கிறோம் என்றோ, “காங்கிரஸ் ஒழிக! ராகுல் காந்தியே, சித்தராமையாவுக்கு அறிவுரை சொல்!”
“காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்க்கும் சித்தராமையாவை கண்டிக்கிறோம்” என்றோ கோஷங்கள் காதில் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் விழவில்லை!

மாறாக, கர்நாடகத்தில் பாஜக., ஆட்சிக்கு வந்தால், காவிரிப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று, கர்நாடகத்தில் அல்ல… தமிழகத்தில் மதுரையில் வைத்து பாஜக.,வின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா பேசியது கர்நாடகத்தில் அரசியல் ஆக்கப் பட்டிருக்கிறது. அது எவ்வாறு என்றால்… கர்நாடகத்தில் பாஜக., ஆட்சிக்கு வந்துவிட்டால், காவிரிப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடுமாம், மேலாண்மை வாரியம் அமைத்து விடுவார்களாம், நாம் தண்ணீரை இழந்துவிடுவோம் என்ற ரீதியில், கர்நாடகத்தில் பாஜக.,வுக்கு எதிரான பிரசாரத்தைச் செய்யத் தொடங்கி யிருக்கிறார்கள்!
அந்த வகையில், ஹெச்.ராஜா தமிழகத்தில் என்ன சொன்னாரோ, அதனையே அரசியலாக்கி கர்நாடகத்தில் மக்களை காவிரி அரசியலில் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் செயலை கச்சிதமாக இங்கே இருக்கும் திமுக.,வினரும், திமுக., சார்பு ஊடகங்களும் களத்தில் இறங்கியுள்ளன.
எனவே, இவர்களது நோக்கம் காவிரியைப் பாதுகாப்பதோ, மணல் கொள்ளையைத் தடுப்பதோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதோ இல்லை…! இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, மத்திய அரசைத் தூற்ற வேண்டும்; தனித் தமிழ்நாடு கோஷத்தைக் கிளப்ப வேண்டும்; மோடியை கண்ணை மூடிக் கொண்டு திட்டித் தீர்க்க வேண்டும்; இந்திய ஒற்றுமைக்கு வேட்டு வைக்க வேண்டும்; தமிழகத்தின் மற்ற ஆறுகளையும் சுரண்டும் மணல் கொள்ளை முதலாளிகள் மீது மக்களின் கவனம் திரும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்… – இப்படி இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வெவ்வேறு அமைப்புகளுக்கு வெவ்வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் கேள்வி கேட்பதில் நியாயம் இருப்பதை அனைவராலும் உணர முடிகிறது.

எனவே, திமுக., இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்று, கர்நாடகத்தைக் கண்டிக்காத காங்கிரஸின் கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்…; சித்தராமையாவை கண்டிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் போது, கூட்டணிக் அட்சி காங்கிரஸின் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போராட வேண்டும். அதுதான் காவிரிக்கான திமுக.,வின் உண்மையான போராட்டமாக இருக்கும்!
#CauveryManagementBoard
#CauveryManagementBoard #CauveryIssues
#KarnatakaElection #CauveryIssue #SupremeCourt



