
காவிரி விவகாரத்தில் இன்று நடைபெற்று வரும் போராட்டங்களில், வன்முறை வெடித்தது. பல இடங்களில் கல் வீச்சும் நடைபெற்றது. இந்தக் கல்வீச்சு சம்பவங்களில், சென்னையில், கூடுதல் துணை ஆணையர் குமார் காயம் அடைந்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்தின் போது கல்வீச்சில் கூடுதல் ஆணையர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற எதிர்க் கட்சியினரை இரண்டு இடங்களில் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுக்க முயன்றனர். இரண்டாவது முறையாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு சற்று முன்னர் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுக்க முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. போலீஸார் அமைத்த தடுப்புகளை அகற்றி முன்னேறிய போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர்.
இதில் மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் துணை ஆணையரான குமாரும் ஆயுதப் படைக் காவலரான முருகனும் படுகாயம் அடைந்தனர்.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் கூடுதல் துணை ஆணையர் குமாருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. குமாரும் முருகனும் உடனடியாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அங்கு இருவருக்கும் காயத்துக்கான உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை கூடுதல் துணை ஆணையராகப் பணி புரியும் ஆர்.குமார், சிறந்த பணி செய்தமைக்கான அண்மையில் குடியரசூத் தலைவர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.



