கள்ளத்தோணி புகழ் வைகோ கோழை, வீரம் என்று பேசுவதற்கே தகுதியற்றவர். பிரதமரைக் கோழை என்று கூறிய மதிமுக பொதுச் செயலர் வைகோவை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கருப்புக் கொடி போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என்றால், பிரதமர் மோடி தமிழகத்துக்குள் சாலை மார்க்கமாகவே வந்து செல்லலாம். தமிழக சாலையில் பயணிக்கக்கூட முடியாத கோழை மோடி… என்று கூறியிருந்தார். மேலும், நாளை தமிழகத்துக்கு வரும் மோடி, தைரியம் இருந்தால் சாலை வழியாக வரட்டும்’ என மோடிக்கு வைகோ சவால் விடுத்தார்.
ஆனால், பிரதமர் பயணம் குறித்து கடந்த ஏப்.6ம் தேதி பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் மூலம் பத்திரிகைகளுக்கு அனுப்பப் பட்ட மோடியின் பயணக் குறிப்பில் அவரது பயணத் திட்டத்தில், சாலைவழியாக பயணம் மேற்கொள்ளும் தகவலை பை ரோட் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில், ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும் ராணுவத் தளவாட கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். தமிழகத்தில் காவிரி தொடர்பான பிரச்னைகள் வலுத்து வரும் நிலையில், மோடி தமிழகம் வரும்போது அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ “தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், நாளை சென்னை வரவிருக்கும் மோடி துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும். தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.ஐ.டி வளாகத்துக்குள் நேராக நுழைந்து, மோடிக்காக ஐ.ஐ.டி சுவரை இடித்துக் கட்டப்பட்ட சாலை வழியாகச் சென்று கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறார். எதற்கு இவ்வளவு பாதுகாப்பு. கறுப்புக்கொடிகளைப் பார்த்து பிரதமர் ஏன் பயப்பட வேண்டும். கொடிகளில் குண்டு வைத்து விடுவோம் எனப் பயப்படுகிறாரா… இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியான பிரதமரை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால், நீங்கள் சாலை வழியாக வாருங்கள்” என ஆவேசமாகக் கூறினார்.
வைகோ-வின் இந்தக் கருத்துக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதைக் கோழை, பயந்தாங்கொள்ளி எனக் கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ-வை வன்மையாகக் கண்டிக்கிறோம், இதைச் சொல்லும் வைகோ, யாருக்குப் பயந்து கள்ளத்தோணியில் இலங்கை சென்றார். பிரதமர், முன்னறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாக்கிஸ்தானுக்கே தைரியமாகச் சென்றவர்” எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்,இதை சொல்லும் திரு.வைகோ யாருக்கு பயந்து கள்ளதோணியில் இலங்கை சென்றார்? பிரதமர் முன்அறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாக்கிஸ்தானுக்கே தைரியமாக சென்றவர்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 11, 2018





