
85 சதவீத மதிப்பெண், கை நிறைய பணம் என்று ஆசை காட்டி, மாணவிகளை பெரிய நபர்களுக்கு இரை ஆக்க பேர பேசி அழைத்துள்ளார் விருதுநகர் கல்லூரி பேராசிரியை ஒருவர். இது குறித்த ஆடியோ பதிவு வாட்ஸ்அப் வழியாக வைரலாகப் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டையில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு கணிதத் துறையின் பேராசிரியராக இருக்கும் ஒருவர், தேர்வுத் தாள்களை திருத்துவதற்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அப்படி அவர் பல்கலை.,க்குச் சென்றுவந்த போது, அவரை அணுகிய உயரதிகாரிகள் கல்லூரி மாணவிகளை தங்களுக்கு அட்ஜஸ்ட் செய்து போக அழைத்து வந்தால் வேண்டிய உதவிகள், பணம் தருவதாகவும் அவ்வாறு வரும் மாணவிகளுக்கு கட்டாயம் 85 சதவீத மதிப்பெண்களையும் கை நிறைய பணமும் தருவதாகவும் உறுதியளித்தனராம்.
வறுமை நிலையில் உள்ள கல்லூரி மாணவிகள் நான்கு பேரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்தப் பேராசிரியை, அந்த உயரதிகாரிகள் சொன்னபடி நடந்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், கை நிறைய பணமும் மாதந்தோறும் வரும் என்றும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், உயர் கல்விக்கு உதவி கிடைக்கும் என்றும் பேசுவதாகவும், அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களுக்கு இதில் விருப்பமில்லை, இது குறித்து பேசவேண்டாம், நாங்கள் பிஎஸ்சி.,யுடன் நிறுத்திக் கொள்கிறோம் என்று கூறுவதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் வைரலாகப் பரவி வருகிறது.
இது தொடர்பாக 19 நிமிடங்கள் மாணவிகளுடன் பேசியுள்ள ஆடியோ பதிவு, நிர்மலாதேவி என்ற பெயரில் வைரலாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த ஆடியோ பதிவை வெளியிட்டுள்ள சிலர், இந்தச் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனராம்.
இதை அடுத்து பேராசிரியையை அழைத்த கல்லூரி நிர்வாகம், அவரிடம் உரிய விசாரணை நடத்தியபோது, அவர் தாம் அந்த மாணவிகளிடம் பேசியது உண்மைதான் என்றும், ஆனால் தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டு, வேண்டுமென்றே திரித்து வெளியிடப் பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த கல்லூரி நிர்வாகம், அந்தப் பேராசிரியையை 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஒரு கல்லூரிப் பேராசிரியை, இவ்வாறு தவறான வழிகளை கல்லூரிப் பெண்களுக்கு காட்டுவது போல் செயல்படுவதால், அவரின் பின்னணியில் இருக்கும் மதுரை பல்கலை., உயரதிகாரிகள் யார்? என்பது குறித்து விசாரணை செய்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, இந்தப் பேராசிரியை பேசிய போது, கவர்னர் அன்று வந்திருந்தபோது நீங்கள் பார்த்தீர்கள் இல்லையா? கவர்னர் ’தாத்தா’ இல்லை… சீக்ரெட் என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக ஏதோ பேசுவதால், தற்போதைய அரசியல் சூழ்நிலையை வைத்துக் கொண்டு, இதைப் பெரிய அளவில் பிரச்னையாக்கிக் கிளப்ப, இந்த ஆடியோ பதிவு எடிட் செய்யப் பட்டு உள்நோக்கத்துடன் வெளியிடப் பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
எனவே இதன் பின்னணியில் ஏதோ சதி வேலை இருப்பதை உணர முடிகிறது. மாணவிகளிடம் பேசிய ஆடியோ பதிவு எப்படி லீக் ஆனது; யார் எடிட் செய்தது? ஏன் சில தகவல்கள் மட்டும் பீப் சத்தத்துடன் மறைக்கப்பட்டு, அந்த பேராசிரியை என்ன சொல்ல வருகிறார் என்பது மறைக்கப் பட்டது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.
ஒருவேளை யாரோ நான்கு மாணவிகளை மதுரை காமராஜ் பல்கலை உயரதிகாரிகளுக்கு அட்ஜஸ்ட் செய்து போவது போல் அழைப்பதாக இருந்தால், அதுவும் இதுபோல் தான் இதுவரை செய்ததில்லை என்றும், தன்னையே மிகவும் சோதனைகள் செய்து இந்த விஷயத்தைத் தன்னிடம் கொடுத்ததால், தான் இவ்வாறு ஒரு தகவலைச் சொல்வதாகவும் அந்தப் பேராசிரியை பேசுவதால், பல்கலையில் இது போல் பாலியல் வன்மம் நிறைந்த சம்பவங்கள் முன்னமேயே நடந்திருப்பது போல் தோன்றுகிறது. அவ்வாறு உண்மை வெளிவந்தால், அது தமிழகத்தையே பதற வைக்கும் ஒரு சம்பவமாகவே மாறிப் போகும்!
***
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி கணிதப் பேராசிரியை ஒருவர் மாணவிகளை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் பேசும் தொலைபேசி உரையாடல்; வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



