தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், இன்று மாலை 6 மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியவை…
தமிழக ஆளுநராக நான் 6 மாதங்கள் பணியாற்றியுள்ளேன்.
தற்போது காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை குறித்த ஆடியோ பதிவு விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ்., அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் வேந்தருக்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. வேந்தர் என்பவர் மாநில அரசையோ அமைச்சர் களையோ கலந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், உணர்வுப் பூர்வமான இந்த விவகாரத்தில், பல்கலைக் கழகம் என்னுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் மீது எந்த புகாரும் இல்லை. இந்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டு தவறானது. இந்த விவகாரம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். இதில் நிச்சயமாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்.
பேராசிரியை நிர்மலா தேவியை யார் என்றே எனக்குத் தெரியாது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது, சிலர் அங்கும் இங்குமாக வந்து போவார்கள். அதை வைத்து மற்ற விவகாரங்களில் சம்பந்தப் படுத்தக்கூடாது. அந்தப் பெண்மணி என்னை தாத்தா போன்றவர் என்றுதான் அந்த ஆடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனக்கு பேரன் பேத்திகள் அல்ல… கொள்ளுப்பேரனே உள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணைக் குழு அளிக்கும் அறிக்கையைத் தொடர்ந்து அதன் பேரில் நடவடிக்கை இருக்கும். இதனை சிபிஐ., விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இப்போது இல்லை. தேவைப்பட்டால் அமைக்கப்படும்.
கல்வித்துறையில் எந்தத் தவறுமே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. தவறுகள் சில நடந்துள்ளன. எனவே கல்வித்துறையில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.. என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் இத்தகைய விளக்கத்தை அளித்ததுடன், தொடர்ந்து பேசிய ஆளுநர் அவர் மீதான மற்ற சில குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார்.