சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு தள்ளுபடி செய்யப் படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறியது.
மேலும், சட்டமன்ற அவைத் தலைவர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக, நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி குறித்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது.
1. ஓ பன்னீர் செல்வம் 2. மனோகரன் 3. செம்மலை 4. ஆறு குட்டி 5. ஆர் நட்ராஜ் 6. சண்முகநாதன் 7. கே.பாண்டியராஜன் 8. சின்னராஜ் 9. சரவணன் 10. மாணிக்கம் 11. மனோரஞ்சிதம் – இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கக் கோரும் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, திமுக., சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜரானார்.
பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்த பின்னர், எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்; 18-ஆம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.