திருவாரூர்: மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கர்நாடகத்துக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி என்று, கருணாநிதியின் சொந்த ஊரிலேயே பேசினார்.
அவர் மேலும்பேசிய போது, காவிரி ஆற்றில் கர்நாடகா பல அணைகளைக் கட்டியபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போதும்கூட காவிரி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி பிரச்னையை தீர்க்க 2007இல் மத்திய அரசுக்கு திமுக எந்த அழுத்தமும் கொடுக்காதது ஏன்?
திமுக அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
நேரத்துக்கு தகுந்தது போல் நிறத்தை மாற்றிக் கொள்ளும் கட்சி அதிமுக இல்லை. காவிரி பிரச்னையில் செய்த தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நடைப் பயணம் மேற்கொள்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுப்பப்பட்டிருக்கிறது. காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா. கருணாநிதியைப் போல் இல்லாமல், ஜெயலலிதா தான் பதவியில் இருந்த போதெல்லாம் காவிரிக்காகப் போராடினார். சட்டப் போராட்டம் நடத்தினார்… – என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.




