சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் துணை ராணுவப் படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் வந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து, தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதே நேரம், திருமுருகன் காந்தி, சீமான் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், துணை ராணுவப் படையினர் வந்திருப்பது வழக்கமான பயிற்சியின் பொருட்டுதான் என்று கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக., திமுக., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமாகா. பாமக., என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் பரவலாக உண்ணாவிரதம், சாலைமறியல், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல் என பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அதுபோல், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை கைவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அதிவிரைவுப் படையினர் நேற்று கும்பகோணம் வந்தனர். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், அவசர காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், சாலைமறியல் உள்ளிட்டவை நடந்தால், மாற்றுப் பாதைகள் பயன்படுத்துவது குறித்தும், பதற்றமான இடங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறையினரையும் மத்திய அதிவிரைவு படையினர் சந்தித்துப் பேசினர். அப்போது அந்தந்த ஊர்களில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அதிவிரைவு படையினர் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து கும்பகோணம் ஏஎஸ்பி கணேசமூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்கள் கோவையில் உள்ள 105-வது படை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 40 வீரர்கள் கும்பகோணம் வந்து பதற்றம் நிலவக்கூடிய பகுதிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறினர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய படையினர் பயிற்சிக்காகவே வந்துள்ளனர்” என்று கூறினார்.
இதனிடையே, மத்திய அதி விரைவுப் படையைச் சேர்ந்த 54 வீரர்கள் நேற்று ஆய்வுப் பணி யை முடித்துக் கொண்டு இரவே கோவை புறப்பட்டுச் சென்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் பதட்டமான சூழல் நிலவுவதால் எப்போது வேண்டுமானாலும் அதிவிரைவுப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்பதால், தகுந்த முன்னேற்பாடுகள், ஆய்வுப் பணிகளை அவர்கள் மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது. மேலும் விவசாயிகளிடையே போராட்டம் என்ற பெயரில் வன்முறையாளர்கள் கலந்திருப்பதால், போராட்டக் களத்தில் வன்முறைகளும் அசம்பாவிதங்களும் நேரக் கூடும் என்று கருதப் படுவதால், இந்த முன்னேற்பாடுகளை துணை ராணுவத்தினர் எடுத்துள்ளனராம்.