அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வார கால அவகாசம் கொடுத்து ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்வதற்கு தூண்டிய பேராசிரியர் நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை வளையத்தில் உள்ளார். நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, மதுரை பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி அவரது நண்பர் தங்க பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு குழு அமைத்தார், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
அவர், மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள், அருப்புக்கோட்டை கல்லூரி, சிறையில் உள்ள நிர்மலா தேவி என இது தொடர்புடைய பலரிடம் விசாரித்துள்ளார். மேலும், நிர்மலா தேவி விவகாரத்தில் யாராவது புகார் கொடுக்க வேண்டுமென்றால், தாராளமாகத் தங்கள் குழுவிடம் கொடுக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். விசாரணை அறிக்கையை ஏப்.30க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி கொடுத்துள்ளார்.