சென்னை: வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.
1 முதல் 12-ஆம் வகுப்புவரை 14 ஆண்டுகளாக பாடத் திட்டங்கள் மாற்றப் படாமல் அதே பாடத்திட்டமே நடைமுறையில் இருந்தது. எனவே, மாறி வரும் அறிவியல் வளர்ச்சி, மாறி வரும் சூழல், தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றுக்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என பலரும் அரசுக்கு கோரிக்கையாக எழுப்பி வந்தனர்.
இதை அடுத்து பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. மேலும் மத்திய அரசு சார்பில் தற்போது நுழைவு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நீட் உட்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித நுழைவு தேர்வாக இருந்தாலும் அதனை சமாளிக்க மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் புதிய பாடத்திட்டங்களில் ஆலோசனை வழங்குவதற்கு ஏதுவாக சென்னை கலைவாணர் அரங்கில் 3 நாட்கள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக, கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இந்த ஆலோசனைகளைப் பெற்று புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு தீவிரமாக ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையறுக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள கருத்துரு கேட்கப்பட்டிருந்தது.
அந்தக் கருத்துருவின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து சிபிஎஸ்இ புத்தகங்களுக்கு இணையாக தற்போது 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகங்கள் மாணவர்கள் எளிதில் கிழிக்க முடியாத அளவில் லேமினேஷன் செய்யப்பட்டு பைண்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்கோட் ஆகியவைகளும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. உயர்தர, நவீன முறையில் இந்த புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பாடத்திட்டங்களை சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.
தற்போது முதற்கட்டமாக1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 2,3,4,5,7,8,12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு இந்த வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்.
இதையொட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தப் புதிய பாடத்திட்டங்கள் மாணவர்கள் அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாகவும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வாய்ப்புகளை அளிப்பதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை இது அமைத்துத் தரும் என்று கூறப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாடநூல்களை வெளியிட்டார்கள். #TNEducation pic.twitter.com/QGBYfI6zmX
— K.A Sengottaiyan (@KASengottaiyan) May 4, 2018




