திருப்பதி: ஆதார் அடையாள அட்டை இருந்தால் போதும், பக்தர்கள் 2 மணி நேரத்தில் திருப்பதிப் பெருமாளை தரிசனம் செய்துவிடலாம் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதியில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து அல்லது நேரில் பெற்று ரூ.300 கட்டண தரிசனத்தில் டிக்கெட் பெற்றவர்கள் விரைவாக பெருமாளை தரிசனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது.
இலவச தரிசனம் செய்பவர்கள் பல மணி காத்திருக்க வேண்டியிருக்கும். கூண்டு அறைகளில் அடைக்கப்பட்டு, வெகு நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம்செய்யும் நிலை உள்ளது.
இந்நிலையில் இலவச தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையைக் கொண்டு வந்தால் 2 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அமைப்பின் இணை செயல் அலுவர் கூறிய போது, இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் சோதனை முறையில் அமல் படுத்தப் பட்டதாகவும், அதை தற்போது அதிகார பூர்வமாக நடைமுறைப் படுத்தியுள்ளதாகவும் கூறினார்.




