சேலம்: சேலம் வழியே எட்டு வழிச் சாலை அமைந்தால் எட்டு பேரை வெட்டுவேன் என்று வன்முறையைத் தூண்டிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ‘சினிமா ரவுடி’ மன்சூர் அலிகான்.
சேலத்தில் விமான நிலையம் விரிவாக்கப்படவுள்ளது. இங்கே எட்டு வழிச் சாலை ஒன்று அதிவிரைவு சாலையாக அமைக்கப்பட வுள்ளது. நாட்டில் எந்த திட்டங்கள் வந்தாலும், திட்டங்களுக்கான அறிவிப்புகள் வந்தாலும், அவற்றை எதிர்ப்பதற்கென ஒரு கூட்டம் சில பின்னணி வேலைகளைச் செய்யும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.
அத்தகைய சக்திகள், இப்போது பிரபலமானவர்கள், திரையுலகத்தினர், தனித்தமிழ் இயக்கத்தினர், அரசுக்கு எதிரான கொள்கைகளைப் பேசி வருபவர்கள் ஆகியோரை வரிசையாக அழைத்து, சேலத்தில் நீர்நிலைகளைப் பார்வையிடுவது, சுற்றுச் சூழலைப் பார்வையிடுவது என்று அழைத்துச் சென்று காண்பித்துவிட்டு, ஊடகங்களை அழைத்து இத்தகைய நபர்களை பேட்டி அளிக்க வைத்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதாக ஊடகங்களில் சொல்லும்.
அத்தகைய ஒரு நிகழ்வுக்காக, நடிகர் மன்சூர் அலிகான், சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதாகக் கூறி, நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு ஒரு குழுவால் அழைத்து வரப் பட்டார். பின்னர் அவர் அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவிட்டு, ஊடகங்களுக்கு வழக்கம் போல் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியவை… நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.
எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல் படுத்தக் கூடாது. மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரைக் கொன்று விட்டு சிறைக்கு செல்வேன்… – என்று கூறினார்.
தொடர்ந்து ஓமலூர் அருகே உள்ள சட்டூர், தும்பிபாடி, காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார் மன்சூர் அலிகான்.
இவ்வாறு பேசிய மன்சூர் அலிகானுடன், சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் உடனிருந்தார்.




