நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவலர் ஜெகதீஷ் மணல் கொள்ளையரால் அடித்துக் கொல்லப் பட்ட விவகாரத்தில் இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வரின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலையத்தில், தனிப்பிரிவு முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. செபஸ்டியன் என்பவரின் மகன் ஜெகதீசன் துரை 6.5.2018 அன்று பணியிலிருந்த போது, டிராக்டர் வாகனத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல்நிலை காவலர் ஜெகதீசன் துரை குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, குற்றவாளிகள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
கடமை உணர்வுடன் பணியாற்றிய போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த முதல்நிலைக் காவலர் ஜெகதீசன் துரை குடும்பத்தில் ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கவும், கடமையாற்றிக் கொண்டிருந்த போது உயிரிழந்த முதல் நிலைக் காவலர் ஜெகதீசன் துரை குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவலர் ஜெகதீஷ் உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவலர் ஜெகதீஷ் துரையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள், ஜெகதீஷ் துரையின் மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.