திருநெல்வேலி மாவட்டம் – அம்பாசமுத்திரத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் இடத்தில் ஒரு ஆபத்தான டிரான்ஸ்பார்மர். படத்தில் காண்பதுபோல், அதி மின் சக்தி கம்பியை ஒட்டி நிறுத்துக் கம்பி உள்ளது.
இந்தக் கம்பியை இந்த இடத்தில் வாகனம் நிறுத்துவோர், இந்தப் பாதையை பயன்படுத்துவோர் அனைவரும் தொட்டுக் கொண்டோ, பிடித்துக் கொண்டோ செல்வதை ஒரே நாளில் பலமுறை காண நேர்ந்தது.
இந்தக் கம்பிக்கும் அதி மின்சக்தி கம்பிக்கும் சில இஞ்சுகளே இடைவெளி. இந்த டிரான்ஸ்பார்மர் நிறுவியவர்களும் இந்த ஆபத்தை உணர்ந்தே உள்ளனர் போலும்!
அதனால் தான் அதி மின்சக்தி கம்பியில் ஒரு மெல்லிய பிவிசி பைப்பை சொருகி விட்டுள்ளனர்.
ஆனால், காற்று அடிக்கும் போதும், நிறுத்துக் கம்பி உராயும் போதும் இந்த பிவிசி பைப் நகர்ந்தால், அப்போது யாரேனும் நிறுத்துக் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தாலோ, பெரும் காற்று, மழைக் காலத்திலோ, உயிர் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பிரச்னை ஏற்பட்ட பின்னர் தடபுடலாக நடவடிக்கை எடுப்பது போல் செயல்படுவதை விட, உயிர்ப் பலியை முன்னதாகவே தடுத்து, மின்வாரியம் தயவுசெய்து எங்களைக் காத்தருள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?
செய்தி / படங்கள்: மு.ராம்குமார்




