ஆச்சி, ஆட்சி என்று வார்த்தை ஜாலத்தில் விளையாடுவதாக எண்ணிக் கொண்டு ரஜினிக்கு பதில் கொடுத்த அமைச்சர் செல்லூர் ராஜு, இப்போது வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அவர் நகரத்தார் சமூகத்தை இழிவுபடுத்தியதாக கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், தான் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை என்று கதறியிருக்கிறார் செல்லூர் ராஜு.
இது குறித்து அவர் கூறியபோது, தாம் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. அப்போது அவர், நதிகள் இணைப்பு என்கிற திட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ரஜினிகாந்த ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை வேண்டுமானாலும் பிடிக்கலாம் என்றவாறு ஏதோ ஆட்சி ஆச்சி என வார்த்தைகளால் விளையாடுவது போல் எண்ணிக்கொண்டு பேசியிருந்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு, காரைக்குடி நகரத்தார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளது என்றும், தனது கருத்தினால் நகரத்தார் சமூகத்தினரின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு தான் வருந்துவதாகவும் கூறினார்.
முன்னர் தனது கருத்துக்கு எதிர்ப்பு எழுந்தபோது, தான் ஆச்சி என நடிகை மனோரமாவைத்தான் குறிப்பிட்டதாகக் கூறியிருந்தார்.




