தமிழகத்தை மட்டுமல்ல, நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது ஒரு ஆலைக்கு எதிராக ஊர் மக்கள் கிளர்ந்து எழுந்து போராடி, துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் இழந்த சோக சம்பவம்.
அப்பாவிப் பொதுமக்கள் சிலரின் தூண்டுதலால் ஆலைக்கு எதிராக நூறு நாட்களாக போராடி வரும் நிலையில், பின்னணியில் புகுந்த சமூக விரோத இயக்கங்களும் தேச விரோத சக்திகளும் பொதுமக்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். போலீஸார் மீது கடுந்தாக்குதல்கள் நடத்தப் பட்டன.
இந்த நிலையில், மேலும் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலும், சிலர் சமூக வலைத்தளங்களில் பொய்களைப் பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் கருத்துகள் அப்பாவிப் பொதுமக்களால் அதிகம் விவாதிக்கப் படுவதும், அதை நம்புவதும் இந்தத் தகவல் தொழில்நுட்ப காலத்திலும் கொடுமையானதாக உள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காவல்துறை சீருடை அணிந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசினார் சின்னத்திரை நடிகை நிலானி. அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்று நிலானி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், காவல் துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை என்றும் திட்டமிட்டு நடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் நடந்தது தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ளதாக பேசிய அவரது பேச்சு, முதலில் ஒரு காவல் அதிகாரியே பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் பின்னரே அவ்வாறு பேசியது காவல் அதிகாரி இல்லை, நடிகை என்பது தெரியவந்தது.
இதை அடுத்து நிலானியின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆள்மாறாட்டம், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நிலானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





