தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரம் நெல்லைக்கும் பரவியதால், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பம், இணையத்தள சேவைகளை முடக்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து, மூன்று மாவட்டங்களிலும் இணையதள சேவைகள் முடங்கின.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் வன்முறைக் காட்சிகள், காவல்துறையினரின் தடியடி, துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கலவரக் காட்சிகளை, திரித்தும் பொய்களை ஏற்றியும், வன்முறையைப் பரப்பும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்கள் வழியாக பரப்பப் பட்டு வருகின்றன. இவற்றைக் காணும் மக்களிடம் மேலும் பீதி பரவி வருகிறது.
இத்தகைய கருத்துப் பரவலாக்கத்தால் வன்முறை மேலும் பரவும் என அச்சம் எழுந்துள்ளது. இதை அடுத்து, இந்த மூன்று மாவட்டங்களிலும் அமைதி திரும்பும் வரையில் தகவல் தொழில்நுட்பம், இணையதளச் சேவைகளை முடக்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இது குறித்து மாநில உள்துறை அமைச்சகம் 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு அனுப்பி வைத்தது. இதை அடுத்து, இன்று இரவு 8 மணி முதல் இணையத்தளச் சேவைகள் முடக்கப்பட்டன. மொபைல் நெட்வொர்கின் டேடா சேவை, தரைவழி பிராட்பேண்ட் டேடா சேவை ஆகியவை நிறுத்தப் பட்டுள்ளன. இவற்றில் வாய்ஸ் கால்ஸ் எனப்படும் குரல் வழி சேவை மட்டுமே தொடர்ந்து கிடைக்கும்.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். வங்கிக் கணக்குகள், பண பரிவர்த்தனை முதல் பல்வேறு நிதி தொடர்பான பரிவர்த்தனைகளும் மொபைல் வழியேயும், இணையம் வழியேயும் நடத்தப் படுவதால் அந்த சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றனர்.




