சென்னை: வங்கிகளில் ரூ.824 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஹெச்.டி.எஃப்.சி., பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் பெற்று கனிஷ்க் நிறுவனம் மோசடி செய்ததாக சம்பந்தப்பட்ட வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் சிபிஐ.,யில் புகார் அளிக்கப் பட்டது. இதை அடுத்து போலி நிதி அறிக்கை தயாரித்து வங்கிகளில் கடன் பெற்றது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடித் தடுப்பு பிரிவில் கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார், அவரது மனைவியும் நிறுவனத்தின் இயக்குநருமான நீதா ஜெயின், பங்குதாரர்கள் 3 பேர் உள்பட 5 பேர் மீது பெங்களூருல் சிபிஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், சென்னை அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கனிஷ்ன் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே மதுராந்தகத்தில் ரூ.48 கோடி மதிப்பிலான அவரது சொத்து அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட நிலையில், பூபேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.




