
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அகத்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றால அருவிகளில் தடை நீக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதிகளில் நேற்று முந்தினம் இரவு முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு அறிகுறிகள் தென்பட்ட நிலையில் விடிய விடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந் நிலையில் சாரல் மழை காரணமாக தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில் அக்னி நட்சத்திரம் முடிவு காலமான நேற்று தட்ப வெப்ப நிலை மாறி முழுமையாக குளுமையான சூழல் நிலவியது.
தொடர்ந்து சாரல் மழையோடு கூடிய பலத்த காற்றும் வீசியதில் செங்கோட்டை பகுதிகளில் நேற்று இரவு சில இடங்களில் மரம் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. இதே போல குற்றாலம் வனப் பகுதியில் பலத்த மழை காரணமாக குறைந்து விழுந்த அருவி நீர் வெள்ளமாக மாறி கொட்டத் தொடங்கியது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் மெயினருவியிலும், ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகளை குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
தொடர்ந்து மழை நேற்று இரவில் குறைந்த நிலையில் இன்று காலை மெயினருவியில் வெள்ளம் குறைந்த து. இதனைத் தொடர்ந்து காலை முதல் ஐந்தருவி, மெயினருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கோடை விடுமுறை நாட்கள் என்பதால் இன்று காலை முதல் கூட்டம் மேலும் அதிகரித்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியோடு சென்ற வண்ணம் உள்ளனர். தொடர் மழை காரணமாக வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



