மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பன்ருட்டி வேல்முருகன், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றார் பன்ருட்டி வேல்முருகன். அப்போது, தூத்துக்குடி போலீஸார் அவரைக் கைது செய்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி உடைப்பு சம்பவத்தில் வழக்கு பதியப் பட்டிருந்த நிலையில், உளுந்தூர்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்டு, புழல் சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு திடீரென தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டைதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட வேல்முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.




