சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மையப் படுத்தி ஏற்பட்ட கலவரத்துக்கு திமுக., எம்எல்ஏ., கீதாஜீவனே காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்த விளக்க அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று காலை தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் பேசிய அவர், காவல் துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை மீறி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் கூடிய புகைப்படத்தை சட்டப்பேரவையில் காட்டினார். மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம், பேருந்துகளுக்கு தீவைப்பு தொடர்பான புகைப்படங்களையும் அவையில் காட்டிய அவர், ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
போராட்டத்தின் போது, அரசியல் கட்சியினர் ஊடுருவியதாகக் கூறியது திமுக.,வினரைத் தான் என்று விளக்கம் அளித்த முதல்வர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுக.,வே காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
திமுக., தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே திமுக.,வை குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் திமுக.,வினர் அமளியில் ஈடுபட்டனர்.




