புதுச்சேரி: ஆச்சரியமூட்டும் சம்பவமாக சைக்கிளில் சென்று மாநில முதல்வருக்கு துணை நிலை ஆளுநர் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் வீட்டுக்கு சைக்கிளில் சென்றார் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. அங்கே சென்று, அவருக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதனிடையே, புதுவைக்கு ஆளுநராக வந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, ஆளுநர் கிரண்பேடிக்கு நாராயணசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவைத்தலைவர் வைத்தியலிங்கத்தையும் அவரது வீட்டுக்குச் சென்று கிரண்பேடி சந்தித்துப் பேசினார்.
கிரண் பேடி து.நி. ஆளுநராக புதுவைஇக்கு வந்ததில் இருந்து, அவருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் வார்த்தை மோதல்களும் சண்டை சச்சரவுகளும் பெருகிக் கொண்டே வந்தன. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற புதுவை கம்பன் கழக விழாவில், ஆளுநர் கிரண் பேடியின் பேச்சை மொழிபெயர்த்துச் சொல்லுமாறு முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டுக் கொண்டார் கிரண்பேடி. இதன் பின்னர் இருவருக்கும் இடையே சற்று சுமுகமான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று முதல்வரின் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண் பேடி.





