சென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் பங்கேற்கப் போவதாக திமுக., அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தற்காலிக அழுகுணி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த மே 29ஆம் தேதி துவங்கியது. அன்று சட்டசபைக்கு வந்த எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அரசு நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சட்டசபையைப் புறக்கணிப்பதாகக் கூறினார். தொடர்ந்து திமுக., எம்எல்ஏ.,க்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின்னர் சென்னை அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். திமுக., – எம்எல்ஏ.,க்கள் மட்டுமல்லாது, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்எல்ஏ.,க்களும், ஜெயலலிதாவின் கருணையால் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸும் பங்கேற்றனர். இதே போல் மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை மற்ற நகரங்களிலும் நடத்தப் போவதாக திமுக., அறிவித்தது. இருப்பினும் மாதிரி சட்டமன்றக் கூட்டத்தில் ஒரு மாதிரியாகப் பங்கேற்ற காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்எல்ஏ.,க்கள் மறு நாளே சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் சட்டமன்றத்தில் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் சுலபமாக மானியக் கோரிக்கைகளை அதிமுக., அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணிக் கட்சி தலைவர்கள், சட்டசபை விவாதங்களில் திமுக., பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில், நாளை முதல் மீண்டும் சட்டசபைக்கு செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலகும் வரை சட்ட மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்தார் ஸ்டாலின். தானும் சட்டமன்றம் போகாமல், கூட்டணியினரையும் போகவிடாமல் தடுக்கலாம் என்று நினைத்த நிலையில், மறு நாளே கூட்டணிக் கட்சியினர் வழக்கம் போல் சட்டமன்றத்துக்குச் சென்றனர். மூவர் அணியில் தனியரசு சட்டமன்ற நிகழ்ச்சியிலும், கருணாஸ் திமுக.,வின் போட்டி சட்டமன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். தமிமுன் அன்சாரி இரண்டிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து மூவர் அணியின் முரண்பாட்டை வெளிக்காட்டினார்.
தம் எண்ணம் நிறைவேறாத நிலையில், வேறு வழியின்றி சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் படி, திமுக.,வின் தற்காலிக போட்டி சட்டசபைக் கூட்டம், சட்டசபைப் புறக்கணிப்பு உள்ளிட்ட அழுகுணி ஆட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன.




