துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்தச் சம்பவம் மிகவும் வேதனையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உடற்கூறு ஆய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணையின் போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிந்தது துரதிர்ஷ்டவசமானது என வருத்தம் தெரிவித்தது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் எத்தனை நாட்களுக்கு உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பது என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை நாளையும் (5ஆம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.




